Wednesday, July 7, 2010

முதல் சந்திப்பு . . .



இப்போது போலவே இருக்கிறது உனைப் பார்த்தது
நேரம் தான் எத்தனை விரைவாய் ஓடுகிறது . . .
இப்போது நினைத்தாலும் மலர்கிறது
புன்னகை தானே அந் நினைவில் . . .

புகையிரத நிலைய இருக்கையில் நான்
புகையிரதத்தின் உள்ளே - நீ . . .
இன்னும் காணவில்லையே என நானும்
நிறுத்தம் வரவில்லையேயென நீயும் . . .

நெருங்குவதை உணர்ந்த நானோ சுவருக்குப் பின்னே
வெளியேற இலகுவாய் நீயோ கதவருகே . . .
நின்றது புகையிரதம் மட்டுமா
எம் நேரங்களும் தானே . . .

ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும்
வண்ண வண்ணமாய்க் கனவுகளும் . . .
அத்தனைக்கு மத்தியில் பயமும்
என்ன சொல்லப் போகிறோமொமென நாமும் . . .

என்ன சொல்வதென தெரியாமல்
நாம் இருவரும் திகைத்திட்ட வேளையில் . . .
கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன
வார்த்தைகளோ வெளிவரவே வெட்கப்பட்டன . . .

நடைபாதை ஓரம் நம் கால்கள் நடை பழக
நம்மிடையே ஒரு ஒதுக்கம் சிறு தயக்கம் . . .
கடைக் கண் பார்வைகள் மட்டும் தாராளமாய்
இருவரிடமிருந்தும் வேக வேகமாய் . . .

உனைக் கிள்ளியதில் எனக்கு வலித்தது
உண்மை உணர்ந்தேன் கனவன்று நிஜமே என்று . . .
முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம்
எல்லாம் நேருக்கு நேரே கண் முன்னே . . .