Sunday, February 28, 2010

மாறிப் போனது . . .


உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . .

உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . .

உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . .

உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . .

உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . .

உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன்
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .

Friday, February 26, 2010

நம் . . . விருப்பங்கள் . . .


மாலை மயங்கும் வேளையில்
ஒரு ஐபாட்டில் நம்மிருவர் காதுகள் . . .

பௌர்ணமி நிலா ஒளியில்
ஒரே வழியில் நடக்கும் நம் கால்கள் . . .

அடை மழை நாள் ஒன்றில்
ஒரே குடையின் கீழ் நாமிருவர் . . .

கடற்கரையில் கால் நனைக்கையில்
ஒன்றாய்க் கோர்த்த நம் கைகள் . . .

கோடை வெயிலின் வெம்மையில்
ஒரு இளநீரைப் பகிரும் நாமிருவர் . . .

மகிழ்ச்சியில் புன்னகைக்கையில்
ஒவ்வொன்றாய் விரியும் நமது இதழ்கள் . . .

நேரே சந்தித்த சந்தோஷத்தில்
ஒருங்கே திறந்து மலரும் நம் கண்கள் . . .

திரைப்படம் பார்க்கையில்
ஒன்றாய் சேர்ந்த நமது தலைகள் . . .

தொலைகாட்சி பார்க்கையில்
ஒரே இருக்கையில் நாமிருவர் . . .

கண்ணாடி முன் தலைவாருகையில்
ஒன்றாய் தெரியும் நம் விம்பங்கள் . . .

Thursday, February 25, 2010

உன்னால் ஏன் . . .


என் காதலை தடையின்றி கேட்கும் உன்னால்
ஏன் என் கோபத்தை ஏற்க முடியவில்லை . . .

என் சிரிப்பை மட்டும் ரசிக்கும் உன்னால்
ஏன் என் கண்ணீரை ஏற்க முடியவில்லை . . .

என் விருப்புகளை தெரிந்தும் உன்னால்
ஏன் என் வெறுப்புகளை ஏற்க முடியவில்லை . . .

என் பொறுமையை மட்டும் விரும்பும் உன்னால்
ஏன் என் திட்டுக்களை ஏற்க முடியவில்லை . . .

Sunday, February 14, 2010

காதலர் தினம் . . .


இன்று காதலர் தினமாம் உலகே கொண்டாடுகிறது
நாம் இருவரும் என்ன செய்கிறோம் . . .
நாம் தான் நவீன காதலர்கள்
இருபத்தோராம் நூற்றாண்டில் . . .
நீயோ அங்கே நானோ இங்கே
நடுவே பல்லாயிரம் மைல்கள் . . .
நமக்கான சிறு ஆறுதலோ
உன்னுள்ளே நான் என்னுள்ளே நீ . . .
நமது உலகமோ இணையத்தில்
அரட்டை, மின் அஞ்சல், வெப்காம் . . .

Saturday, February 13, 2010

சிறு சிறு எதிர்பார்ப்புகள் . . .


கொஞ்சலாய் கொஞ்ச முத்தங்கள்
கெஞ்சலாய் சில மன்றாடல்கள்
மிஞ்சலாய் சிறு முறைப்புகள் . . .

கண்களில் சின்னதாய் ஒரு சிரிப்பு
புன்னகையில் வளையும் இதழ்கள்
செல்லமாய் சின்னச் சிணுங்கல்கள் . . .

அன்பாய் ஓரிரு குறுஞ் செய்திகள்
வம்பாய் சில நிமிட கைபேசி உரையாடல்
எல்லாம் சேர்ந்த ஒரு மணிநேர அரட்டைகள் . . .

கிறுக்கலுடன் வந்திடும் வாழ்த்தட்டைகள்
தகவல் சொல்லிடும் மின் அஞ்சல்கள்
ஆசையாய் தந்திடும் வெப் காம் தரிசனங்கள் . . .

தலை சாய்த்திட திடமான ஒரு தோள்
முகம் புதைத்திட பரந்த நெஞ்சம்
தழுவிட நீண்டிடும் இரு கைகள் . . .

சோர்ந்திட்ட வேளையில் இதமான வார்த்தைகள்
கோபத்தின் போது விட்டுக் கொடுத்தல்
சுகவீனத்தை மறக்கச் சின்னதாய் ஓர் அணைப்பு . . .

Sunday, February 7, 2010

புரியாத . . . புரிந்துணர்வு . . .


நமக்குள்ளே புரிந்துணர்வு அதிகரிக்க
என்னதான் செய்ய வேண்டும் நாம்
புரியவில்லை எனக்கு எதுவும்
உனக்காவது தெரியுமா எதுவேனும் . . . ?

என்னைப் போல் நீ மாறவேண்டாம்
உன்னைப் போல் நான் மாற வேண்டாம்
ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுப்பதற்கான பொதுப்புள்ளிதான் எதுவோ . . .?

எனக்குப் பிடித்ததை நீயும்
உனக்குப் பிடித்ததை நானும்
எத்தனை சதவீதம் செய்தால் போதும்
எப்படி அறிவது இதனை . . . ?

நீ செய்வது உன்னைப் பொறுத்தவரை
என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
நான் செய்வது என்னைப் பொறுத்தவரை
உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் நடப்பதென்னவோ தலைகீழாவதேன் . . . ?

Saturday, February 6, 2010

கோபமும் . . . அன்பும் . . .



காதலில் கோபமும் அன்பும் சந்திர சூரியர் போலும்
சூரிய ஒளியை வாங்கி இரவில் சந்திரன் ஒளிர்வது போலே
கோபமும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடேயாம் . . .

அன்பு அதிகமெனின் அவர்பால் கோபமும் நிறைந்தே வரும்
காலையில் சந்திரன் மறைய சூரியன் உதிப்பது போலே
கோபத்தின் பின்னான அன்பும் அதிகமாய் வரும் . . .

Thursday, February 4, 2010

உன் நினைவு . . .



உன்னைப் பற்றி சிந்தித்தாலே
என்னை அறியாமலே புன்னகைக்கிறேன் . . .

நீ செய்த செயல்கள் எல்லாம்
ஓடுகின்றன மனதில் திரைப்படமாய். . .

நீ சிரிக்கும் போது என் கோபமெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளியாய் . . .

எப்படி மாற்றினாய் இப்படி என்னை
என்னிடமே வாதாடுகிறேன் உனக்காய் . . .

உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில்
மறுபடி நடந்து பார்க்கிறேன் நான் தனியாய் . . .

தூக்கத்தை தொலைத்தேன் உன் நினைவில்
இரவும் பகலும் தினம் கனவில் . . .

என்னோடு நீ உன்னோடு நான்
நமக்கென ஒரு உலகம் கைபேசியில் . . .