Sunday, February 28, 2010

மாறிப் போனது . . .


உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . .

உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . .

உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . .

உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . .

உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . .

உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன்
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .

Friday, February 26, 2010

நம் . . . விருப்பங்கள் . . .


மாலை மயங்கும் வேளையில்
ஒரு ஐபாட்டில் நம்மிருவர் காதுகள் . . .

பௌர்ணமி நிலா ஒளியில்
ஒரே வழியில் நடக்கும் நம் கால்கள் . . .

அடை மழை நாள் ஒன்றில்
ஒரே குடையின் கீழ் நாமிருவர் . . .

கடற்கரையில் கால் நனைக்கையில்
ஒன்றாய்க் கோர்த்த நம் கைகள் . . .

கோடை வெயிலின் வெம்மையில்
ஒரு இளநீரைப் பகிரும் நாமிருவர் . . .

மகிழ்ச்சியில் புன்னகைக்கையில்
ஒவ்வொன்றாய் விரியும் நமது இதழ்கள் . . .

நேரே சந்தித்த சந்தோஷத்தில்
ஒருங்கே திறந்து மலரும் நம் கண்கள் . . .

திரைப்படம் பார்க்கையில்
ஒன்றாய் சேர்ந்த நமது தலைகள் . . .

தொலைகாட்சி பார்க்கையில்
ஒரே இருக்கையில் நாமிருவர் . . .

கண்ணாடி முன் தலைவாருகையில்
ஒன்றாய் தெரியும் நம் விம்பங்கள் . . .

Thursday, February 25, 2010

உன்னால் ஏன் . . .


என் காதலை தடையின்றி கேட்கும் உன்னால்
ஏன் என் கோபத்தை ஏற்க முடியவில்லை . . .

என் சிரிப்பை மட்டும் ரசிக்கும் உன்னால்
ஏன் என் கண்ணீரை ஏற்க முடியவில்லை . . .

என் விருப்புகளை தெரிந்தும் உன்னால்
ஏன் என் வெறுப்புகளை ஏற்க முடியவில்லை . . .

என் பொறுமையை மட்டும் விரும்பும் உன்னால்
ஏன் என் திட்டுக்களை ஏற்க முடியவில்லை . . .

Sunday, February 14, 2010

காதலர் தினம் . . .


இன்று காதலர் தினமாம் உலகே கொண்டாடுகிறது
நாம் இருவரும் என்ன செய்கிறோம் . . .
நாம் தான் நவீன காதலர்கள்
இருபத்தோராம் நூற்றாண்டில் . . .
நீயோ அங்கே நானோ இங்கே
நடுவே பல்லாயிரம் மைல்கள் . . .
நமக்கான சிறு ஆறுதலோ
உன்னுள்ளே நான் என்னுள்ளே நீ . . .
நமது உலகமோ இணையத்தில்
அரட்டை, மின் அஞ்சல், வெப்காம் . . .

Saturday, February 13, 2010

சிறு சிறு எதிர்பார்ப்புகள் . . .


கொஞ்சலாய் கொஞ்ச முத்தங்கள்
கெஞ்சலாய் சில மன்றாடல்கள்
மிஞ்சலாய் சிறு முறைப்புகள் . . .

கண்களில் சின்னதாய் ஒரு சிரிப்பு
புன்னகையில் வளையும் இதழ்கள்
செல்லமாய் சின்னச் சிணுங்கல்கள் . . .

அன்பாய் ஓரிரு குறுஞ் செய்திகள்
வம்பாய் சில நிமிட கைபேசி உரையாடல்
எல்லாம் சேர்ந்த ஒரு மணிநேர அரட்டைகள் . . .

கிறுக்கலுடன் வந்திடும் வாழ்த்தட்டைகள்
தகவல் சொல்லிடும் மின் அஞ்சல்கள்
ஆசையாய் தந்திடும் வெப் காம் தரிசனங்கள் . . .

தலை சாய்த்திட திடமான ஒரு தோள்
முகம் புதைத்திட பரந்த நெஞ்சம்
தழுவிட நீண்டிடும் இரு கைகள் . . .

சோர்ந்திட்ட வேளையில் இதமான வார்த்தைகள்
கோபத்தின் போது விட்டுக் கொடுத்தல்
சுகவீனத்தை மறக்கச் சின்னதாய் ஓர் அணைப்பு . . .