Saturday, November 13, 2010

நீயும் . . . நானும் . . .


உன்னோடான பொழுதுகள் எதற்காகவேனும்
குறைகையில் உன்னை மிக மிக
அதிகமாக பிரிந்திருப்பதாய் உணர்கிறேன் . . .
இன்னும் எப்படியெல்லாம் உன்னோடான
நேரங்களை அதிகரிக்கலாம் என்றே
கணக்கு போடுகிறது என் மனது . . .
அவை கிடைக்காத போது அந்த தவிப்பானது
கடுங் கோபமாகி விடுகிறது உன் மீதே . . .

உன் வரவு . . .


நேற்றைய இரவு நீ வரப் போகிறாய் என்றதும்
உன் வரவின் போது நாமிருவரும்
என்னவெல்லாம் செய்யலாம் என
திட்டமிட்டது என் மனது சந்தோஷத்தில்
இன்றைய காலை உன் வரவே கேள்விக்குரியானதால்
மொத்தமாய் இருட்டித் தெரிகிறது என் வாழ்வு . . .

Thursday, November 11, 2010

பேசச் சொல் . . .



உன்மேல் கோபம் கோபமாக வருகிறது
எனக்குத்தான் உன்மேல் ஏதோ கோபம்
பேசாமல் இருக்கிறேன் உன்னுடன் உனக்கென்ன . . .
நீயும் ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய்
என்னைத் அன்பாய்த் திட்டி மிரட்டி
உன்னுடன் பேசச் சொல்லாமல் . . .

Thursday, November 4, 2010

ஐ லவ் யூ . . .



என்னிடம் நீ சொல்லாது விட்ட
ஐ லவ் யூக்களை சேர்த்து வைத்தால் . . .
நாம் சந்திக்கையில் அதையன்றி என்னிடம்
வேறெதுவும் பேச உனக்கு நேரமே கிடைக்காது . . .

Friday, October 1, 2010

இதனாலோ . . .



கண்ணைத் திறந்தே காணும் கனவுகளும் இதனாலோ
மேலே பறப்பது போல மிதப்பதும் இதனாலோ . . .

நிறைந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இதனாலோ
உரிமை எண்ணம் கூடுவதும் இதனாலோ . . .

மற்ற உறவெல்லாம் தள்ளித் தெரிவதும் இதனாலோ
ஒருவரே உலகமாவதும் இதனாலோ . . .

கோபங்கள் கொந்தளிப்பதும் இதனாலோ
ஆசைகள் அலைபாய்வதும் இதனாலோ . . .

மௌனங்கள் பேசிடுவதும் இதனாலோ
வார்த்தைகள் வற்றிப் போவதும் இதனாலோ . . .

சுவை கூட சுவையற்றுப் போவதும் இதனாலோ
பசி கூட பறந்து போவதும் இதனாலோ . . .

இதனால் இதனால் என்றே சொல்லப்படுவதும்
இந்தக் காதல் எனப்படுவது தானோ . . .

Monday, August 30, 2010

இரண்டாய். . . ஒன்றாய். . . இரண்டாய். . .


நீ நான் என்பது போய் நாம் ஆகியது
எனது உனது போய் நமது ஆகியது
என் உன் போய் நம் ஆகியது . . .

இத்தனையும் ஒன்றாய் இருந்தும்
உன் உலகம் என் உலகம் இரண்டும்
ஒன்றாய் மாறாதது ஏனோ . . .

நாம் ஒன்றாய் காணும் கனவும்
நம் வாழ்வில் நடக்கும் நனவும்
இரண்டாய் வேறுபடுவது ஏனோ . . .

உனக்கென நானும் எனக்கென நீயும்
பார்த்துப் பார்த்து எத்தனை செய்யினும்
அவை மறைந்து போவது ஏனோ . . .

Wednesday, July 7, 2010

முதல் சந்திப்பு . . .



இப்போது போலவே இருக்கிறது உனைப் பார்த்தது
நேரம் தான் எத்தனை விரைவாய் ஓடுகிறது . . .
இப்போது நினைத்தாலும் மலர்கிறது
புன்னகை தானே அந் நினைவில் . . .

புகையிரத நிலைய இருக்கையில் நான்
புகையிரதத்தின் உள்ளே - நீ . . .
இன்னும் காணவில்லையே என நானும்
நிறுத்தம் வரவில்லையேயென நீயும் . . .

நெருங்குவதை உணர்ந்த நானோ சுவருக்குப் பின்னே
வெளியேற இலகுவாய் நீயோ கதவருகே . . .
நின்றது புகையிரதம் மட்டுமா
எம் நேரங்களும் தானே . . .

ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும்
வண்ண வண்ணமாய்க் கனவுகளும் . . .
அத்தனைக்கு மத்தியில் பயமும்
என்ன சொல்லப் போகிறோமொமென நாமும் . . .

என்ன சொல்வதென தெரியாமல்
நாம் இருவரும் திகைத்திட்ட வேளையில் . . .
கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன
வார்த்தைகளோ வெளிவரவே வெட்கப்பட்டன . . .

நடைபாதை ஓரம் நம் கால்கள் நடை பழக
நம்மிடையே ஒரு ஒதுக்கம் சிறு தயக்கம் . . .
கடைக் கண் பார்வைகள் மட்டும் தாராளமாய்
இருவரிடமிருந்தும் வேக வேகமாய் . . .

உனைக் கிள்ளியதில் எனக்கு வலித்தது
உண்மை உணர்ந்தேன் கனவன்று நிஜமே என்று . . .
முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம்
எல்லாம் நேருக்கு நேரே கண் முன்னே . . .

Saturday, May 29, 2010

சொல்லாமலே . . .




நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும்
சொல்ல மறந்த கதையாக . . .

Sunday, May 23, 2010

கண்ணீர்


உன்னை நானோ என்னை நீயோ
காயப்படுத்தும் வேளைகளில்
கண்ணில் தானாய் வழிகிறது கண்ணீர்
கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாய்

பிரிவு




நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும்
நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை
இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால்
பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்

Tuesday, April 20, 2010

இதைத்தான் காதல் என்பதா . . .


என்ன தான் என் மீது நீயும் உன் மீது
நானும் எவ்வளவுதான் கோபப்பட்டாலும்
என்னால் உன்னுடனோ உன்னால் என்னுடனோ
கதைக்காது இருபத்து நான்கு மணிநேரம் கூட
நகர்த்த முடிவதில்லை இயல்பாய்
இதைத்தான் காதல் என்பதா . . .

ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் திட்டினும்
சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் இறங்கி வருவது
ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துதல்
விதிகள் பல உருவாக்கி கடைப்பிடிக்க முயல்வது
அதே விதிகளை அறிந்தும் அறியாமலும் நாமே மீறிடுதலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதும்
மற்றவரைக் கெஞ்ச வைத்து வீம்பாய் இருத்தல்
இருவரும் அன்பாய்க் கொஞ்சிக் கொள்ளல்
சிரிக்க வைக்க முயன்று ஜெயிப்பதும் தோற்பதும்
ஒற்றுமை எப்படி உள்ளதென்று சதவீதம் பார்த்தலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

Wednesday, April 14, 2010

நிழல் காதல் vs நிஜக் காதல் . . .



திரைப் படம் மற்றும் நாவல்களில் வரும் காதல்
தூங்கும் போது வரும் சந்தோஷக் கனவு - ஆதலால்
தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் மனது . . .

நிஜ வாழ்வில் முளைத்து வரும் காதல்
இனிய கனவின் பின்னாக வரும் விழிப்பு
கண்ட கனவே நினைவுக்கு வராத நிஜம் . . .

காணும் கனவு நடப்பதில்லையென முகத்திலடிக்கும் உண்மை . . .
கனவுக்கும் நனவுக்கும் வெகுதூரமென உணரவைக்கும் உணர்வு . . .
நிழலுக்கும் நிஜத்திற்குமிடையே தொலையும் தூக்கம் - காதலால் . . .

Monday, March 29, 2010

இயந்திர யுகத்தில் காதல் வரவு செலவு . . .



இயந்திரத்தமான இவ் வாழ்வில் காதலில்

நாம் இழந்தது என்ன
சொல்லாது விட்ட ஐ லவ் யூக்கள்
சொல்ல மறந்த ஐ மிஸ் யூக்கள்
அளிக்க மறுத்த முத்தங்கள்
கணணி முன்னான நாட்களில் காதலிப்பவர்கே
பகிர முடியாத போன பொழுதுகள்
அலுவலக வேலைகளில் அனுப்பாது விட்ட குறுஞ் செய்திகள்
பதிலனுப்ப நேரமின்றிப் போன மின் அஞ்சல்கள்

நாம் பெற்றது என்ன
குமுறும் எரிமலையாய் கோபங்கள்
அனுமதியின்றியே கலங்கும் கண்கள்
அதிகரிக்கும் மனஸ்தாபங்கள்
கூடிச் செல்லும் மனஸ்தாபங்கள்
அடிக்கடி வரும் சண்டைகள்
அலைபாயும் மன நிம்மதி
அர்த்தமின்றியே சொல்லும் ஐ ஹேட் யூக்கள்

Saturday, March 6, 2010

புரிந்தும் . . . புரியாமலும் . . .


விளங்கவில்லை எனக்கு என்னை
உனக்குப் புரிகிறதா இல்லையாவென . . .

என்னை உனக்குப் புரியவில்லையா
இல்லை புரிந்தும் புரியாதது போல் இருகிறாயா . . .

பல நேரங்களில் சுமாராகக் கூட ஊகிக்க
முடியவில்லை என்னால் உன்னைப் பற்றி . . .

Sunday, February 28, 2010

மாறிப் போனது . . .


உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . .

உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . .

உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . .

உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . .

உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . .

உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன்
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .

Friday, February 26, 2010

நம் . . . விருப்பங்கள் . . .


மாலை மயங்கும் வேளையில்
ஒரு ஐபாட்டில் நம்மிருவர் காதுகள் . . .

பௌர்ணமி நிலா ஒளியில்
ஒரே வழியில் நடக்கும் நம் கால்கள் . . .

அடை மழை நாள் ஒன்றில்
ஒரே குடையின் கீழ் நாமிருவர் . . .

கடற்கரையில் கால் நனைக்கையில்
ஒன்றாய்க் கோர்த்த நம் கைகள் . . .

கோடை வெயிலின் வெம்மையில்
ஒரு இளநீரைப் பகிரும் நாமிருவர் . . .

மகிழ்ச்சியில் புன்னகைக்கையில்
ஒவ்வொன்றாய் விரியும் நமது இதழ்கள் . . .

நேரே சந்தித்த சந்தோஷத்தில்
ஒருங்கே திறந்து மலரும் நம் கண்கள் . . .

திரைப்படம் பார்க்கையில்
ஒன்றாய் சேர்ந்த நமது தலைகள் . . .

தொலைகாட்சி பார்க்கையில்
ஒரே இருக்கையில் நாமிருவர் . . .

கண்ணாடி முன் தலைவாருகையில்
ஒன்றாய் தெரியும் நம் விம்பங்கள் . . .

Thursday, February 25, 2010

உன்னால் ஏன் . . .


என் காதலை தடையின்றி கேட்கும் உன்னால்
ஏன் என் கோபத்தை ஏற்க முடியவில்லை . . .

என் சிரிப்பை மட்டும் ரசிக்கும் உன்னால்
ஏன் என் கண்ணீரை ஏற்க முடியவில்லை . . .

என் விருப்புகளை தெரிந்தும் உன்னால்
ஏன் என் வெறுப்புகளை ஏற்க முடியவில்லை . . .

என் பொறுமையை மட்டும் விரும்பும் உன்னால்
ஏன் என் திட்டுக்களை ஏற்க முடியவில்லை . . .

Sunday, February 14, 2010

காதலர் தினம் . . .


இன்று காதலர் தினமாம் உலகே கொண்டாடுகிறது
நாம் இருவரும் என்ன செய்கிறோம் . . .
நாம் தான் நவீன காதலர்கள்
இருபத்தோராம் நூற்றாண்டில் . . .
நீயோ அங்கே நானோ இங்கே
நடுவே பல்லாயிரம் மைல்கள் . . .
நமக்கான சிறு ஆறுதலோ
உன்னுள்ளே நான் என்னுள்ளே நீ . . .
நமது உலகமோ இணையத்தில்
அரட்டை, மின் அஞ்சல், வெப்காம் . . .

Saturday, February 13, 2010

சிறு சிறு எதிர்பார்ப்புகள் . . .


கொஞ்சலாய் கொஞ்ச முத்தங்கள்
கெஞ்சலாய் சில மன்றாடல்கள்
மிஞ்சலாய் சிறு முறைப்புகள் . . .

கண்களில் சின்னதாய் ஒரு சிரிப்பு
புன்னகையில் வளையும் இதழ்கள்
செல்லமாய் சின்னச் சிணுங்கல்கள் . . .

அன்பாய் ஓரிரு குறுஞ் செய்திகள்
வம்பாய் சில நிமிட கைபேசி உரையாடல்
எல்லாம் சேர்ந்த ஒரு மணிநேர அரட்டைகள் . . .

கிறுக்கலுடன் வந்திடும் வாழ்த்தட்டைகள்
தகவல் சொல்லிடும் மின் அஞ்சல்கள்
ஆசையாய் தந்திடும் வெப் காம் தரிசனங்கள் . . .

தலை சாய்த்திட திடமான ஒரு தோள்
முகம் புதைத்திட பரந்த நெஞ்சம்
தழுவிட நீண்டிடும் இரு கைகள் . . .

சோர்ந்திட்ட வேளையில் இதமான வார்த்தைகள்
கோபத்தின் போது விட்டுக் கொடுத்தல்
சுகவீனத்தை மறக்கச் சின்னதாய் ஓர் அணைப்பு . . .

Sunday, February 7, 2010

புரியாத . . . புரிந்துணர்வு . . .


நமக்குள்ளே புரிந்துணர்வு அதிகரிக்க
என்னதான் செய்ய வேண்டும் நாம்
புரியவில்லை எனக்கு எதுவும்
உனக்காவது தெரியுமா எதுவேனும் . . . ?

என்னைப் போல் நீ மாறவேண்டாம்
உன்னைப் போல் நான் மாற வேண்டாம்
ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுப்பதற்கான பொதுப்புள்ளிதான் எதுவோ . . .?

எனக்குப் பிடித்ததை நீயும்
உனக்குப் பிடித்ததை நானும்
எத்தனை சதவீதம் செய்தால் போதும்
எப்படி அறிவது இதனை . . . ?

நீ செய்வது உன்னைப் பொறுத்தவரை
என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
நான் செய்வது என்னைப் பொறுத்தவரை
உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் நடப்பதென்னவோ தலைகீழாவதேன் . . . ?

Saturday, February 6, 2010

கோபமும் . . . அன்பும் . . .



காதலில் கோபமும் அன்பும் சந்திர சூரியர் போலும்
சூரிய ஒளியை வாங்கி இரவில் சந்திரன் ஒளிர்வது போலே
கோபமும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடேயாம் . . .

அன்பு அதிகமெனின் அவர்பால் கோபமும் நிறைந்தே வரும்
காலையில் சந்திரன் மறைய சூரியன் உதிப்பது போலே
கோபத்தின் பின்னான அன்பும் அதிகமாய் வரும் . . .

Thursday, February 4, 2010

உன் நினைவு . . .



உன்னைப் பற்றி சிந்தித்தாலே
என்னை அறியாமலே புன்னகைக்கிறேன் . . .

நீ செய்த செயல்கள் எல்லாம்
ஓடுகின்றன மனதில் திரைப்படமாய். . .

நீ சிரிக்கும் போது என் கோபமெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளியாய் . . .

எப்படி மாற்றினாய் இப்படி என்னை
என்னிடமே வாதாடுகிறேன் உனக்காய் . . .

உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில்
மறுபடி நடந்து பார்க்கிறேன் நான் தனியாய் . . .

தூக்கத்தை தொலைத்தேன் உன் நினைவில்
இரவும் பகலும் தினம் கனவில் . . .

என்னோடு நீ உன்னோடு நான்
நமக்கென ஒரு உலகம் கைபேசியில் . . .

Saturday, January 30, 2010

நீ . . . நான் . . . நிலவு . . .


நாம் இரவில் உரையாடுகையில்
நீ நான் நிலவு மட்டுமே விழித்திருப்பதாய்
சொல்வாயே முன்பெல்லாம்
இன்று நானும் நிலவும் இங்கே
உனக்காய் காத்திருக்கையில்
நீ மட்டும் கதிரவனோடு உறவாடி
என்னையும் நிலவையும் மறந்து
செல்வது தகுமா நியாயம் சொல்வாயா நீ . . .

Monday, January 25, 2010

நீ யாரைப் போலென்று நான் சொல்லட்டுமா . . .

நீ எந்த நடிகனைப் போல் இருப்பதாக
மற்றோர் கூறுவர் என்றேன்
உனக்குத் தெரியாதென்றாய்
நான் சொல்லட்டுமா நீ யாரைப் போலென்று

நீ சூர்யா மாதிரி - உருவத்திலல்ல
அவரது திரைப்படக் கதாபாத்திரங்களில்

உன் வேகத்தில் காக்க காக்க சூர்யா
உன் மௌனத்தில் மௌனம் பேசியதே சூர்யா

உன் கோபத்தில் நந்தா சூர்யா
உன் காதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா

உன் மறதியில் கஜனி சூர்யா
உன் சில செயல்களில் ஆய்த எழுத்து சூர்யா

உன் நட்பில் பிரெண்ட்ஸ் சூர்யா
உன் பாசத்தில் வாரணம் ஆயிரம் சூர்யா

உன் கரிசனையில் பேரழகன் சூர்யா
உன் அடாவடியில் ஆறு சூர்யா

உன் நகைச்சுவையில் மாயாவி சூர்யா
உன் வம்பில் அயன் சூர்யா

Saturday, January 23, 2010

உனக்குத் தெரியுமா . . .


என்னுடைய ஒவ்வொரு நாளும் உன்னோடான
தொலைபேசி உரையாடலில் தான் தொடக்கப்படுகிறது

என் இருபத்து நான்கு மணிநேரமும் உன்னோடான
ஒரு மணி நேர அரட்டையில் தான் அடக்கப்படுகிறது

என்னுடைய நேசத்தின் ஆழம் உன்னோடான
கோபதாபங்களில் தான் தெரியப்படுகிறது

என் உணவு வேளைகள் உன்னோடான
மின்னஞ்சல்களில் தான் சுருக்கப்படுகிறது

என்னுடைய இரவுகள் உன்னோடான
குறுஞ் செய்திகளில் தான் முடிக்கப்படுகிறது

என் கனவுகளின் ஆரம்பம் உன்னோடான
தொலைதூரப் பயணங்களில் தான் காணப்படுகிறது

என்னுடைய பெண்மையின் தன்மை உன்னோடான
பொழுதுகளில் தான் அறியப்படுகிறது

என் இன்பதுன்பத்தின் எல்லைகள் உன்னோடான
பகிர்தலில் தான் அளவிடப்படுகிறது

என்னுடைய வெட்கத்தின் முகவரி உன்னோடான
சந்திப்புகளில் தான் வெளிப்படுகிறது

என் சுவாசத்தின் அடையாளம் உன்னோடான
நெருக்கத்தில் தான் பெறப்படுகிறது

என்னுடைய இதயத்தின் துடிப்பு உன்னோடான
அணைப்பில் தான் உணரப்படுகிறது

என் உயிரின் ஓசை உன்னோடான
முத்தங்களில் தான் கேட்கப்படுகிறது

என்னுடைய காதலின் அர்த்தம் உன்னோடான
வாழ்க்கையில் தான் தீர்மானிக்கப்படவுள்ளது

Friday, January 22, 2010

கண்ட நாள் முதல் . . .



உன்னைக் கண்ட நாள் முதல்
பல்வேறு மாற்றங்கள் என்னுள்ளே . . .

கண்கள் கனவுகளில் நிறைந்து போனது
காதல் நெஞ்சில் கலந்து போனது

துக்கம் தூரமாய்ப் போனது
தூக்கம் தொலைந்து போனது

சின்னச் சின்ன தாபங்கள் வந்து போனது
சீறிச் சினப்பது சகஜமாய்ப் போனது

செல்லும் இடமெல்லாம் வெறுமையாய்ப் போனது
சேர்ந்து சுற்றப் பிரியமாய்ப் போனது

தனியே சிரிப்பது பழகிப் போனது
தானே பேசுவது வழமையாகிப் போனது

திரும்புமிடமெல்லாம் உன் விம்பம் ஓடிப் போனது
தீராத ஆசைகள் உன் மேல் கூடிப் போனது

பசியென்பதே பறந்து போனது
பார்வையெல்லாம் புதிதாய்ப் போனது

வெறுமை எல்லாம் கரைந்து போனது
வேற்றுமை எல்லாம் மறைந்து போனது

நினைவெல்லாம் உனதாகிப் போனது
நீயே எந்தன் உயிரென்றாகிப் போனது

Sunday, January 17, 2010

ஏனோ . . . ?


உன்னைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்
ஒரு சிறு செயலே போதுமானதாக இருப்பதுமேனோ. . .

உன் குரல் அலைபேசியில் கேட்டதும்
என்னுள் ஏதேதோ நடப்பதுமேனோ. . .

உன்னுடன் பகிர வரும் விடயங்களும்
நம் சந்திப்பில் மாயமாவதுமேனோ. . .

உன் கரம் கோர்த்து நடக்கும் வேளையில்
எதையும் சந்திக்கும் தைரியம் வருவதுமேனோ. . .

உன்னைக் கனவில் காண்கையில் கூட
என்னுள்ளே பட்டம் பூச்சிகள் பறப்பதுமேனோ. . .

உன் மேல் வரும் கொள்ளை ஆசையும்
ஒரு நொடியில் கடுங் கோபமாவதுமேனோ. . .

உன்னிடம் இவற்றைக் கேட்க நினைப்பதும்
பின் கேட்டகாமலே விடுவதும் வழமைதானோ. . .

உன் மௌனம் . . .


உன்னுடன் யாவற்றையும் பேசிப் பகிர்வதே
என் வாழ்வென நான் நினைக்கையில் - இன்றைய
உன் மௌனம் கொல்கின்றது என்னைச்
சிறிது சிறிதாய் . . .

Thursday, January 14, 2010

நம் பார்வையும் . . . சுவர்களும் . . .



உன்னுடன் இல்லாத நேரங்களில்
உன்னைப் பார்க்கத் தோன்றும்
உன்னைக் கண்டதும் உன் கண்களைப் பார்க்கும்
தைரியம் ஏனோ இல்லை - என் கண்களுக்கு
இதுவரை பார்க்காதது போன்று அவை
சுற்றியுள்ள சுவர்களைச் சுற்றுகின்றன

சரி நீயாவது என்னைப் பார்க்கின்றாயா என்றால் - ஆம்!
நீ என்னைப் பார்க்கின்றாய் - நான்
உன்னை கண்களைப் பார்க்காத போது
இல்லையெனில் நீயும் பார்ப்பதென்னவோ
அதே சுவர்களைத் தான் - உன்னையும்
காட்டிக் கொடுத்து விட்டன - உன் கண்கள்
என்னுடையவற்றைப் போன்றே!

Tuesday, January 12, 2010

"அப்புறம் . . . , பிறகு . . ., வேறென்ன . . ."


நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும்
"அப்புறம், பிறகு, வேறென்ன" என நீட்டி இழுக்கிறோம்
நேரம் வெறுமே செல்வதை உணர்ந்தும்
இது ஒரு வகைத் தந்திரம் என்பதைத் தெரிந்தும்
தெரியாதது போல் காட்டியவாறு!

Saturday, January 9, 2010

விலகல் . . .




என்னிடமிருந்து விலகுவதாக நினைக்கின்றாய்
விலகவில்லை - நீ வருத்துகின்றாய்
என்னையும் உன்னையும்!